Sunday, February 14, 2010

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சில பல அசைகள் இருக்கத்தான் செய்கின்றன, எனக்குள்ளும் சில ஆசைகள் உள்ளன அதில் எழுத வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் என்ன எழுதுவது, எப்படி ஆரம்பிப்பது, கதை எழுதுவதா, கவிதை எழுதுவதா, கதை என்றால் சரித்திரக்கதையா, காதல் கதையா, சண்டியர் கதையா இல்லை நட்பை பற்றின கதையா? எதை எழுதுவது என்ற குழப்பம் எனக்குள் எப்பொழுதும் ஒருபுறம் ஓடிக்கொண்டே இருக்கும்.

கேலியும், கிண்டலும், அரட்டையும், விளையாட்டும் நிரம்பி வழியும் என் நண்பர்களுடன் நான் எனது விடுமுறை நாட்களை கழிக்கும்போது, ஒருமுறை என்னை சுற்றி நண்பர்கள் பட்டாளம் இருக்கும் தருவாயில் நான் எழுத வேண்டும் என்ற ஆசையை அவர்களின் முன் வைத்தேன் சொன்ன மாத்திரம் ஒருவன் என்ன மச்சான் "அறியரா" என்றான். கடுப்பாகி போன நான் அவனை ஒரு முறை முறைத்துவிட்டு..... தலைகுனிந்து தரையை பார்த்தவாறே ஒரு மெல்லிய சந்தோஷத்துடன் இல்லடா கதை எழுத போகிறேன் எனது எழுத்தாற்றல் மற்றும் கற்பனை சக்தியை அதிக படுத்திகொள்ள, சிறுகதையிலிருந்து ஆரம்பிக்க போகிறேன் படிபடியாய்.... என்று கூறிக்கொண்டே தலை நிமிர்ந்து பார்த்தால் யாரும் அருகில் இல்லை. ஒருவன் ஸ்டம்ப் அடித்துகொண்டிருக்க, ஒருவன் ஃபீல்டிங் செட் செய்துகொண்டிருக்க மற்றொருவன் பெளலிங் போட ஆயத்தமாகி கொண்டிருந்தான். அதில் ஒருவன் என்னை பார்த்து கையில் நோட்புக்கும் பேனாவும் கொடுத்து மச்சான் எழுதனும்னு சொன்னல்ல இதை வெச்சிகடா என்றான். நான் அவனை கட்டி தழுவி மச்சான் தேங்ஸ் டா நீ எனக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கேடா என்று கூறிக்கொண்டிருகும் போதே டேய் டேய் டேய் அடங்குடா போ போய் ஓரமா உட்கார்ந்து ஸ்கோர் எழுது என்றான். டேய் என்று நான் அலற அவனும் அங்கிருந்து எஸ்கேப்.

ஒருமுறை நானும் எனது நன்பணும் ரயிலில் பயணித்து கொண்டிருக்கும்போது மீண்டும் எனது எழுத என்ற ஆசையை அவனிடம் கூற நல்ல விஷயம்டா ஆனால் அதற்கு இலக்கணம் நல்லா தெரிஞ்சிருக்கனும், கையெழுத்து நல்லா இருக்கனுமே என்று கூறிக்கொண்டே அவன் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததால் இறங்கிவிட்டான். ஆமாம் நம் கையெழுத்து... ஆம் என்னுடைய கையெழுத்தை ஒரு மூன்று வயது சிறுவனுடய கிருக்கலில் ஒப்பிடலாம் அப்படி ஒரு நேர்த்தி. நான் படிக்கும் காலகட்டத்தில் என் பெற்றோற்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னடா எழுத்து இது கோழி கிருக்கல் ஒழுங்கா அழகாய் எழுதுடா என்று வற்புறுத்தியதன் பேரில் இரட்டை வரி நோட்டு புத்தகத்தின் உதவியோடு எனது கையெழுத்தை திருத்திக்கொண்டிருந்தேன். ஒரு வாரத்திற்கு பிறகு என் வீட்டிற்கு எனது மாமா, பாட்டி மற்றும் உறவினர்கள் கோவில் திருவிழாவிற்காக வந்திருந்தனர். அப்போது அப்பா, மாமா, பாட்டி அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நான் எழுதிக்கொண்டிருந்தேன் பாட்டி என் அருகில் வந்து எப்படி டா படிக்கிறான் என் பேரன் என்று சிரித்தபடியே என் அப்பாவிடம் கேட்க அவரும் ஏதோ சுமாராக என்று கூறிக்கொண்டிருக்கும்போதே என் நோட்டு புத்தகத்தை பார்க்க என்னடா இது கையெழுத்து இப்படி இருக்கு என கூறிவிட்டு அப்படியே "கையெழுத்து சரியில்லைனா தலையெழுத்து நல்லா இருக்கும்னு" சொல்வங்க என்று கூறியபடியே என்னை பார்த்து சிரிக்க, அப்பாடா இனி இந்த கையெழுத்து திருத்தும் வேலை இல்லை நமக்கு தலை எழுத்து நன்றாக இருந்தால் போதும் என சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.
இப்படியாகப்போனது என் கையெழுத்து சரி இலக்கணம்?

ஒருமுறை தமிழ் இடைத்தேர்வில் "பால்" எத்தனை வகைப்படும் என்ற கேள்விக்கு நான் தாய்ப்பால், ஆட்டுப்பால், மாட்டுப்பால் அதிலும் (மாட்டுப்பாலிலும்) இரண்டு பிரிவுகள் உண்டு அவையாவன பசும்பால், எருமை பால் என எழுதினேன். தமிழாசிரியர் நான் வசிக்கும் தெருவிலேயே வசித்து வந்தார். இச்சம்பவத்தை அவர் அவருடைய வீட்டில் சொல்லி சிரிக்க அப்படியே அது தெரு முழுக்க பரவ ...... இதற்கு மேல் என் இலக்கண அறிவைப்பற்றி கூற வேண்டாம் இதுவே போதும் என்று நினைக்கிறேன். நான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததால் இறங்கி நடந்தபடியே யோசித்தேன் எழுத வேண்டும் என்றால் முதலில் கையெழுத்தை கொஞ்சம் திருத்த வேண்டும் முதலில் அதை செய்வோம்.

படிப்பு முடிந்ததும் வேலை தேடும் படலம், இப்படியே வீடு வேலை என என் காலம் எனது ஓடிக்கொண்டிருந்தது எனது எழுத்து ஆசை சற்று அடங்கி போனது. வேறொரு அலுவலகத்திற்கு மாறினேன் அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் நாட்கள் அதிகமாக அதிகமாக நண்பர்கள் அதிகமானார்கள், நெருக்கமானார்கள். நான் கிராஃபிக் டிசைன் கணிணி பிரிவில் இருந்தேன். அரட்டை நேரம் போக சில நேரம் வேலை செய்வோம், ஆனால் எங்களுடைய அரட்டை அர்த்தமுள்ளதாகவும் ஆரோக்கியமுள்ளதாகவும் இருக்கும். இப்படி ஒரு தருணத்தில் எழுத வேண்டும் என்ற ஆசையை நண்பர்கள் முன் வைத்தேன் அது அலுவலகம் ஆதலால் யாரும் ஸ்டம்ப் ஒருபுறம் பெளலிங் ஃபீல்டிங் ஒருபுறம் என எகிறாமல் கேட்டுக்கொண்டிருந்தனர். எழுதுவதில் அதிக நாட்டமுடைய எனது உயர் அதிகாரி நல்ல எண்னம் எழுதுங்களேன் என்றார். நான் அவரிடம் சார் எதை எழுதுவது எப்படி ஆரம்பிப்பது எனக்கு இலக்கணமெல்லாம் அவ்வளவாக தெரியாது என்று கூற அவர் சிரித்தவாறே என்னை நோக்கி, கவிதை, நாவல், காவியம் போன்றவற்றிற்குதான் இலக்கண அறிவு தேவை மற்றபடி நம் நடைமுறையில் நடக்கும் நிகழ்வுகளையே யதார்த்தமாக கொஞ்சம் சுவாரசியமக எழுதுங்கள் எழுத ஆரம்பிக்கும்போதே சுவாரசியம் தன்னிச்சையாக வந்துவிடும் என்று கூறிக்கொண்டிருக்கும் போதே எனக்குள் ஏற்கனவே விதைக்கப்பட்டிருந்த எழுத வேண்டும் என்ற விதையிலிருந்து சற்றே முளைத்து ஒரு இலை துளிர்தது. மேலும் நான் அவரிடம் சார் எனக்கு கையெழுத்து கொஞ்சம் சரியாக இருக்காது என்றேன். அவர் பலமாக சிரித்துவிட்டு நீங்கள் என்ன நோட்டு புத்தகத்தில் எழுதி நாலு பேரிடம் கண்பிக்கப்போகிறீர்களா அல்லது ஒன்றிரண்டு எழுதியவுடன் அதை பிரசுரிக்க அச்சகம் செல்ல போகிறீர்களா! முதலில் உங்கள் தாழ்வு மனப்பான்மையை விடுங்கள். இணைய தளத்தில் ப்ளாக்கர் (Blogger) என்று உள்ளது. முதலில் அதில் நீங்கள் உங்களை இனைத்துக்கொண்டு நீங்கள் விரும்பும் பெயரில் ஒரு பிளாக்கை உருவாக்குங்கள். உங்கள் படைப்புகளை அதில் தட்டச்சு உதவியுடன் எழுதுங்கள் என்றார் பிளாக்கை விவரித்தவாறே. எனக்குள் இருந்த பிளக்கை (Block) விடுவித்தது அவருடைய வார்த்தைகள். இப்பொழுது எனக்குள் இரண்டு மூன்று இலைகள் துளிர்விட்டது. மனதார அவருக்கு நன்றி கூறிக்கொண்டேன் (தேங்ஸ் ரகு சார்).

அடுத்த சில நாட்களிலேயே தகவல் தொடர்பு தொழில் துறை சற்று மந்தமாக சம்பளம் சற்று தள்ளி தள்ளி போக ஆட்குறைப்பு நிகழ வேலை பளு அதிகரிக்க கூடவே மன அழுத்தமும் சேர்ந்துவிட எனது எழுத வேண்டும் என்ற ஆசை சோர்ந்து போனது.
'செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' இது வள்ளுவன் வாக்கு ஆனால் இது அப்படியே தலைகீழாக மாறி வயிற்றுப்பிரச்சனை தலை தூக்கியதால் எழுத வேண்டும் என்ற ஆசை மேலும் வாடி போனது. சில மாதங்களுக்கு பிறகு பிரச்சனை ஓரளவு சரியானதால் மீண்டும் என் ஆசையை நினைவுகூற எனது சக ஊழியனிடம் பேசும்போது எனக்கு தமிழில் தட்டச்சு அடிக்க வராது என்றேன் அதற்கு அவர் இது ஒரு பொருட்டல்ல மிகவும் சுலபம் நீங்கள் ஈ-கலப்பையை உபயோகியுங்கள் என்றார். நான் விழித்தபடியே எனக்கு ஏற்கலப்பை தெரியும் அதென்ன ஈ-கலப்பை என்றேன். அவர் சிரித்தவாறே ஈ-கலப்பை என்றொரு சாஃப்ட் வேர் அதை நமது கணிணியில் பொருத்த (Install) வேண்டும் அதில் "யூனி கோட் தமிழ்" என்ற வார்தயை க்ளிக் செய்து செல்ஃபோனில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நாம் எப்படி தமிழை ஆங்கில வர்த்தையில் அடிப்போமோ அதைப்போல் இதிலும் உபயோகியுங்கள் தமிழ் வார்தைகளே வரும் என்றார் நானும் அவ்வறே செய்து பார்த்தேன். வாவ் சூப்பர் ராம்ஸ் என்றேன் எனது மனமார்ந்த நன்றியை கூறியவாறே. எப்படியோ எனது எழுத வேண்டும் என்ற ஆசை வளர்கிறது.

இத்துடன் எனது கட்டுரையை முடித்துக்கொள்கிறேன், என்னுடைய எழுத்துகள் இனி தொடரும் உங்கள் விமர்சனங்களை எதிர்நோக்கி.